மும்பை தீ விபத்தில் 12 பேர் பலி : கட்டிட உரிமையாளரின் அலட்சியம் காரணமா?

மும்பை

மும்பையின் சாகி நாகா பகுதியில் ஒரு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

மும்பையில் சாகி நாகா பகுதியில் கைரானி சாலையில் உள்ள மாக்ரியா காம்பவுண்ட் என்னும் கட்டிடத்தில் பானு ஃபார்சன் ஷாப் என்னும் கடை ஒன்று உள்ளது.   இன்று விடியற்காலை திடீரென அந்தக் கடையில் தீ பிடித்தது.   அந்தக் கடையின் கிரவுண்ட் ஃப்ளோரில் ஒரு அட்டம் போன்ற அமைப்பு உள்ளது.    அதில் அந்தக் கடையின் ஊழியர்கள் இரவு நேரத்தில் தங்கி உறங்குவது வழக்கம்.

தீப்பிடித்த சமயத்தில் அங்கு சுமார் 12 பேர் உறங்கிக் கொண்டிருந்தனர்.   அந்தக் கடையின் மொத்த பரப்பளவான 60 அடிக்கு 30 அடியில் முழுவதுமாக தீ பரவி உள்ளது.   அதிகபடியான உஷ்ணம் மற்றும் புகை காரணமாக அங்கிருந்தவர்கள் மூச்சுத் திணறி இறந்து விட்டனர்.     தீயை அணைத்த பின் அதனுள்ளே சென்ற தீயணைப்புப் படையினர் கருகிய 12 உடல்களைக் கண்டு பிடித்துள்ளனர்.    அடையாளம் தெரியாத நிலையில் உள்ள அந்த சடலங்கள் காட்கோபர் பகுதியில் உள்ள ராஜவாதி மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப் பட்டுள்ளன.

தற்போது மும்பை மாநகராட்சி அதிகாரிகளும்,  காவல்துறையினரும் அந்த உடல்களை அடையாளம் காண முயற்சி செய்துக் கொண்டுள்ளனர்.   தீயணைப்புத் துறையினர் அந்தக் கடையின் உரிமையாளர் செய்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.   மேலும் கட்டிட உரிமையாளர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் காட்டிய அலட்சியத்தால் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்