டில்லி: 

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைபெற்ற மக்கள் போராட்டத்தி துப்பாக்கி சூடு நடத்தி 12 பேர்களை கொலை செய்துள்ளது தமிழக காவல்துறை. இது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் மீது போலீசார் நடத்திய காட்டுமிராண்டித்தமான துப்பாக்கி சூட்டுக்கு சென்னை உயர்நீதி மன்றமும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இந்நிலையில், துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற அகில இந்திய காங்கிரஸ் தலைவர்  ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று பெங்களூரில் கர்நாடக முதல்வர் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொண்டுள்ள ராகுல்காந்தி, ஏற்கனவே தூத்துக்குடி சம்பவம் குறித்து கடுமையான கண்டனங்களை தெரிவித்து உள்ளார். தூத்துக்குடி நிலவரங்களை அவ்வப்போது கேட்டறிந்து வரும் ராகுல் காந்தி விரைவில்  தூத்துக்குடி வர இருப்பதாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி பகுதியில் தற்போது காவல்துறை 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளதால், அது விலக்கப்பட்ட பின், ராகுல் தூத்துக்குடி வருவார் என காங்கிரஸ் கட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.