Random image

எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்க தனிக்கோர்ட்டுகள்: மத்திய அரசு

டில்லி:

நாடு முழுவதும் உள்ள எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்க தனிக்கோர்ட்டுகள் ஏற்படுத்தப் போவதாக மத்திய அரசு உச்சநீதி மன்றத்தில் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் இந்த தனிக்கோர்ட்டுகள் அமைய உள்ளது. இதுகுறித்து அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான வழக்குகள் விசாரிப்பது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபத்யாய் உச்சநீதி மன்றத்தில் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.  அவர் தாக்கல் செய்திருந்த மனுவில்,  ‘‘ஜெயில் தண்டனை முடிந்து திரும்பும் அரசியல்வாதிகளுக்கு தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகளுக்கு தடை விதிக்க வகை செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை விதிகளாக அறிவிக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு குறித்து கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது,  எம்.பி., எம்.எல்.ஏ. க்களுக்கு எதிரான 1,581 வழக்குகளில் எத்தனை வழக்குகள் ஒரு ஆண்டு காலத்திற்குள் முடிக்கப்பட்டது என கேள்வி எழுப்பி இருந்தது. அதைத்தொடர்ந்து,  மத்திய அரசு டிசம்பர் மாதம்  தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ரூ.7.8 கோடி செலவில் 12 சிறப்பு கோர்ட்டுகள் அமைக்க இருப்பதாக தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில்,  எம்.பி., எம்.எல்.ஏ.க் களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு கோர்ட்டுகளை அமைப்பது தொடர்பாக 11 மாநிலங்கள் அறிவிக்கைகள் வெளியிட்டு உள்ளன.

அதன்படி  தலைநகர் டில்லியில் 2 சிறப்பு கோர்ட்டுகள், தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், பீகார், மராட்டியம், மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தனிக் கோர்ட்டுகளையும் அமைக்கப்ட உள்ளன. இந்த சிறப்பு கோர்ட்டுகளுக்கு 1,233 வழக்குகள் மாற்றப்பட  இருப்பதாகவும், இதில் 136 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளன என்றும்,  1097 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.