உ.பி.யின் அவலம்: பலூனை தொட்ட தலித் சிறுவனை அடித்துக்கொன்ற 5 சிறுவர்கள்….

லக்னோ:

கோவில் நிகழ்ச்சியில் பலூனை தொட்டதற்காக 12 வயது சிறுவன் ஒருவனை 5 சிறுவர்கள் ஒன்றாக சேர்ந்து தாக்கி கொன்ற சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி. மாநிலம், ஆக்ரா நகரின் அலிகார் பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது கோவிலுக்குள் கட்டப்பட்டிருந்த அலக்கார பலுனை, அந்த பகுதியை சேர்ந்த தலித் சிறுவன் ஒருவன் தொட்டு பார்த்துள்ளான்.

இதை கண்ட மற்ற சிறுவர்கள் 5 பேர் சேர்ந்து அந்த தலித் சிறுவனை அடித்து காயப்படுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த சிறுவன் மரணம் அடைந்தார்.

இந்த சம்பவத்தை கண்ட மற்றொரு சிறுவனான சுராஜ் என்ற சிறுவன் கொடுத்த தகவலின்பேரில் இந்த கொடுமையான சம்பவம் தெரிய வந்துள்ளது. அதைத்தொடர்ந்த  தாக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

விசாரணையின்போது, சுராஜ் சிறுவன் தெரிவித்த வாக்குமூலத்தில், இரண்டு சிறுவர்கள் தலித் சிறுவனின்  கையையும் இருவர் காலையும் பிடித்துக்கொண்டதாகவும்,  மற்றொரு சிறுவன் வயிற்றில் மிதித்ததாகவும் கூறி உள்ளான்.

தாக்குதலுக்கு ஆளான அந்த தலித் சிறுவன், வீட்டிற்கு வந்ததும்,  தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தான்.

இந்த சம்பவம் குறித்து, காவல்துறை ஐ.சி.சி. மற்றும் எஸ்.சி. / எஸ்.டி. சட்டத்தின் பிரிவு 304 ஏ (கொலை செய்யாத கொலை குற்றங்கள்) கீழ் ஐந்து சிறு குழந்தைகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளதாக மாவட்ட எஸ்.பி. (குற்றம்) அஷுடோஷ் த்விவேதி கூறினார்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், மாநிலத்தில் நிலவி வரும் சாதி பாகுபாடு பற்றி அவலத்தையும் வெளி உலகிற்கு காட்டி உள்ளது.

இந்த விவகாரம் குறித்து பொலிசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

You may have missed