சென்னை:

1200 சதுர அடி கட்டிடத்துக்கு கள ஆய்வின்றி இணையதளம் மூலமே அனுமதி வழங்கப்படும் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கூறினார்.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய இயக்குனர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் சென்னை சிந்தாதரிபேட்டையில் குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தமிழக  அமைச்சர் வேலுமணி  தலைமை தாங்கினார். மேலும், உள்ளாட்சி துறை முதன்மைச் செயலாளர் ஹர்மேந்திரசிங் உள்பட முக்கிய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்   வேலுமணி, கடந்த 2017-18ம் ஆண்டு நடந்த மானியக் கோரிக்கையின்போது, உள்ளாட்சி பகுதிகளில் கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும்,  ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையிலான சிறிய கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டு, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு இருப்பதாக கூறியவர்,   உள்ளாட்சி அமைப்புகளில் 2500 சதுரடி பரப்பளவிற்குள் உள்ள நிலத்தில் 1200சதுர அடிக்கு கட்டப்படும் கட்டிடங்களுக்கு கள ஆய்வின்றி இணையதளம் வாயிலாக கட்டிட மற்றும் திட்ட அனுமதிகள் வழங்கப்படும்  என்றார்.

அதுமட்டுமல்லாது, 1200 சதுரஅடி கட்டிடம் கட்ட மற்றும் திட்ட அனுமதி பெற பொதுமக்கள் உரிய ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பித்தால், கள ஆய்வு மேற்கொள்ளாமல் குறுகிய காலத்திற்குள்ளேயே அனுமதி வழங்கும் வகையில் நடைமுறைகள் எளிமைப்படுத்தி உள்ளதாகவும்,  இதுவரை முறைப்படுத்தப்பட்ட 22,281 மனைப்பிரிவு களில், அங்கீகரிக்கப்பட்ட1,82,957 மனைகளின் உரிமைதாரர்கள் இத்திட்டதின்கீழ் இணையதளம் வழியாக விண்ணப்பித்து, கட்டிட அனுமதியினை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

மேலும்,  புதிய சொத்துவரி விதிப்பு, புதிய குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்புப் பெறுதல் , புதிய வணிக உரிமம் பெறுதல் அல்லது புதுப்பித்தல், போன்ற அனைத்து சேவைகளுக்கும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு வேலுமணி கூறினார்.