டெல்லி: சிறப்பாக புலனாய்வு செய்ததற்காக 121 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கும் பதக்கம், குற்றப் புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, 2018ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. புலனாய்வில் சிறப்பாக செயல்படும்  அதிகாரிகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

இந் நிலையில், 2020ம் ஆண்டுக்கான ன மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சிபிஐயை சேர்ந்த 15 அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது. மத்தியப்பிரதேசம், மகாராஷ்ட்டிரா காவல் துறையைச் சேர்ந்த தலா 10 பேருக்கும் அளிக்கப்படுகிறது.

உத்தரப்பிரதேச காவல்துறையைச் சேர்ந்த 8 பேர், கேரளா, மேற்கு வங்கம் காவல்துறையை சேர்ந்த தலா 7 பேருக்கும், பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மற்றவர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குற்ற வழக்குகளை சிறப்பாக விசாரித்ததற்காக 6 தமிழக காவல் அதிகாரிகளுக்கும் மத்திய அரசு விருது வழங்குகிறது.

தமிழகத்தை சேர்ந்த 6 காவல் அதிகாரிகளில் 5 மகளிர் காவல் ஆய்வாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 5 பேர் உட்பட, 21 பெண் காவல் துறை அதிகாரிகள் விருது பெறுகின்றனர். தமிழக காவல் துறை ஆய்வாளர்கள், ஜி. ஜான்சி ராணி, எம்.கவிதா, ஏ.பொன்னம்மாள், சி.சந்திரகலா, ஏ.கலா மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் டி.வினோத் குமார் ஆகிய 6 பேர் விருது பெற உள்ளனர். புதுச்சேரி காவல்துறை ஆய்வாளர் ஏ. கண்ணன் என்பவரும் விருதுக்கு தேர்வாகி உள்ளார்.