கோவை: அதிமுக பொதுச்செயலாளரும், மறைந்த முன்னாள் முதல்வருமான  ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி,  அதிமுக சார்பில் கோவையில்,   73 வகையான சீர் வரிசைகளுடன் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நடத்தி வைத்தனர்.

மறைந்த அதிமுக பொதுச்செயலாளர்,  ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும்  24ம் தேதி  கொண்டாடப்படவுள்ளது.  இதையொட்டி, அ.தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் ஏழை பெண்களுக்கு இலவச திருமணங்கள் நடத்தி வைப்பது வழக்கம். அதன்படி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்பாட்டின்படி,  இந்த ஆண்டு கோவை பச்சாபாளையத்தில் சிறுவாணி ரோடு பேரூர் செட்டிப்பாளையத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. அங்கு இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் 123 ஜோடிகளுக்கும்  இலவசமாக திருமணம் செய்து வைக்கப்பட்டது.

இந்த விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு, மணமக்களுக்கு  மாங்கல்யம் எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.  இந்த  திருமண ஜோடிகளின் உறவினர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனைவரும் அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

திருமண ஜோடிகளுக்கு கட்டில், பீரோ, மெத்தை, சூட்கேஸ், கியாஸ் ஸ்டவ், சில்வர் குடம், குக்கர் உள்பட 73 வகையான சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.