குன்னூர்:

நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பார்வையாளர்கள் குவியும் 123வது ஊட்டி மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. கவர்னர் பன்வாரிலால் புரோகித் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார். இதைக்காண லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்துள்ளதால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், கோடை விடுமுறையை சந்தோஷமாக கழிக்கவும் லட்சக்கணக்கானோர் குளுகுளு ஊட்டிக்கு படையெடுத்து வருகின்றனர். அங்கு தற்போது குளிர்காற்றுடன் மிதமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தற்போது  ஊட்டியில் கோடை விழா நடைபெற்று வரும் நிலையில், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும்  பாரம்பரியம்மிக்க 123–வது மலர் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

மேலும் சுற்றுலா பயணிகளையும் கவரும் வகையில்,  கவர, தாவரவியல் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.பூங்காவின் பெரணி இல்லம் அருகே 2 லட்சம் மலர்கள் கார்னேஷன் மலர்களால் பாராளுமன்றம்  வடிவம் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. மலர்களால் கொட்டும் 12 அடி உயர அருவி, காளைகள், மயில்கள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது.

மலர்க் கண்காட்சியில் 20 ஆயிரம் வண்ண மலர்ச் செடிகள் அடுக்கி வைக்கப்பட்டு, 15 ஆயிரம் தொட்டிகளில் மலர்அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து உற்பத்தியாகும் பலவகை மலர்களுடன் நீலகிரியில் பூக்கும் கொய்மலர் அலங்காரம், ஆர்கிட்ஸ் மலர்களால் ஆன அலங்கார வளைவுகள் காண்போரை வியக்கச் செய்கின்றன.

5 நாட்கள் நடைபெற உள்ள மலர்க் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று தொடங்கி வைக்கிறார்.  இந்த கண்காட்சியை காண  லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  மலர் கண்காட்சியை காண வரும் மக்களின் வசதிககாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவை, மேட்டுப்பாளையம், மதுரை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர ஏதுவாக 63 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கூட்டம் அதிகரித்தால் கோவை, திருப்பூர், சேலம் டெப்போக்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் ஊட்டிக்கு இயக்கப்படும் என்றும்,  மலர் கண்காட்சி முடியும் வரை சிறப்பு பஸ்கள் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படும் என்றும்  மாவட்ட போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.

சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால், மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறது.