சிரியப் படகு கவிழ்ந்த வழக்கு – 3 பேருக்கு தலா 125 ஆண்டுகள் சிறை

இஸ்தான்புல்: சிரியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு அகதிகளாய் தப்பிச் சென்றபோது, படகு கவிழ்ந்து, 3 வயது சிரிய குழந்தை அய்லான் குர்தி இறந்த வழக்கில், கைது செய்யப்பட்ட 3 நபர்களுக்கு தலா 125 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

துருக்கிய பல்லாண்டுகளாக நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரினால் கடந்த 2015ம் ஆண்டு ஒரு குழுவினர், சட்டவிரோதமாக, படகு ஒன்றில் ஐரோப்பாவிற்கு தப்பிச் சென்றனர். அப்போது, அதிக எடை காரணமாக அந்தப் படகு துருக்கி கடலில் கவிழ்ந்தது.

இதில், மொத்தம் 12 பேர் இறந்துபோனாலும், 3 வயது குழந்தையான அய்லான் குருதியின் உடல் விறைத்த நிலையில் கடற்கரையில் ஒதுங்கிய சம்பவம் மீடியாவின் கவனத்தை அதிகம் பெற்றதால், உலகம் முழுவதும் சென்று சேர்ந்தது.

இந்நிலையில், அந்த விபத்து தொடர்பாக 3 நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணையின் முடிவில் 3 பேர் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. 3 பேருக்கும் தலா 125 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.