அமெரிக்கர்களிடம் பண மோசடி: போலி கால்சென்டர் ஊழியர்கள் 126 பேர் கைது

நொய்டா:

போலி கால் சென்டர் நடத்தி, அதன்மூலம் அமெரிக்கர்களை ஏமாற்றி பணம் பறித்து  வந்ததாக நொய்டாவில் கால் சென்டர் நிறுவனத்தில் பணியாற்றிய பெண்கள் உள்பட 126 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

டில்லி அருகே உள்ள நொய்டா பகுதி உ.பி. மாநிலத்தை சேர்ந்தது. தொழிற் மண்டலமான நொய்டாவில் ஏராளமான தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இங்குள்ள கால் சென்டர் ஒன்று அமெரிக்கர்களிம் ஏமாற்றி பணம் கையாடல் செய்து வருவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில், அதுகுறித்து ரகசியமாக கண்காணித்து வந்த சைபர் கிரைம் போலீசார் நொய்டாவில் உள்ள 63-வது செக்டார் பகுதியில் இயங்கி வந்த ஒரு கால்சென்டரில் நேற்று முன்தினம் இரவு அதிரடியாக சோதனை நடத்தினர். இதில், அவர்கள் முறைகேடுகளான செயல்களில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அந்த கால் சென்டரில் இரவு நேரத்தில் பணியாற்றி வந்த டெலிகாலர்ஸ் பெண்கள் உள்பட 126 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது ஐபிசி 420, 420 பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த கால்சென்டர் மூல்ம் அமெரிக்க மக்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பணம் பெற்று ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த கால் சென்டர் உரிமையாளர் யார், அவர் என்ன ஆனார் என்பதுகுறித்த தகவல் வெளியாக வில்லை.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த கவுதமபுத்தர் நகர் போலீஸ் சூப்பரிடெண்ட் அஜய்பால் சர்மா கூறும்போது, 126 பேருடன் 312 கம்ப்யூட்டர்களும், சுமார் 20 லட்சம் பணமும் கைப்பற்றி உள்ளதாக தெரிவித்து உள்ளார்.