சென்னை:

சென்னையில் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து மயக்க மருந்து கொடுத்து பிச்சை எடுக்க பயன்படுத்தும் கொடூரமான சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேற்றப்படுகிறது. சாலை ஓரங்களில் இதுபோன்ற குழந்தைகளை மயக்கநிலையில் படுக்க வைத்து, நோய்வாய் பட்ட குழந்தைகளைப்போல காட்டி பிச்சை எடுக்கிறார்கள்.

சில பெண்கள் மயக்கமடைந்த குழந்தைகளை தங்களது குழந்தைகளைப்போல இடுப்பில் சுமந்தபடி, பசியால் வாடுவது போல காட்டியும் பிச்சை எடுக்கிறார்கள். இது போன்ற கொடுமைகளை ஒழித்து குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்பேரில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு போலீசார் துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் சென்னை நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு மற்றும் பாரிமுனை ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பிச்சை எடுக்க பயன்படுத்திய 13 குழந்தைகள் மீட்கப்பட்டது. அந்த குழந்தைகளை, குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்து, மறு வாழ்விற்கு வழிவகை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இதுபோல சென்னையில் காணாமல் போனதாக புகார் கூறப்பட்ட 4 குழந்தைகளையும் போலீசார் மீட்டனர். புகார் கொடுக்கப்பட்ட போலீஸ் நிலையங்கள் மூலம் அந்த குழந்தைகள் உரிய பெற்றோர்களிடம் பத்திரமாகஒப்படைக்கப்பட்டனர்.