13பேரை காவு வாங்கிய ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கப்படுகிறதா? பொதுமக்கள் ஆவேசம்

--

தூத்துக்குடி:

13 உயிர்களை பலிவாங்கிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட இருப்பதாக அப்பகுதி மக்களிடையே மீண்டும் அச்சம் ஏற்பட்டு உள்ளது. இது அந்த பகுதியில் மீண்டும் பரபரப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடியில் மீண்டும் ஒரு போராட்டக்களம் உருவாகும் வாய்ப்பை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த  ஸ்டெர்லைட் தாமிர ஆலை காரணமாக அந்த பகுதி மக்க ளுக்கு நுரையீரல் பிரச்சினை, கிட்னி பெயிலியர், புற்றுநோய் போன்ற  ஏராளமான நோய்களால் பாதிக்கப்பட்ட நிலையிலும், நிலத்தடி நீர் அசுத்தமான நிலையிலும்,  அந்த பகுதி  மக்கள் ஆலைக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இந்த மக்கள் போராட்டம் கடந்த மே  மாதம் 22ந்தேதி விசுவரூபம் எடுத்தது. அன்று  நடைபெற்ற  மக்கள் போராட்டத்தின்போது,  காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான  துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் கை கால்களை இழந்து சிகிச்சை பெற்றனர்.

மக்கள் போராட்டத்தின் காரணமாகவே,   ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என தமிழக அரசு கடந்த மே மாதம் 28ந்தேதி  அரசாணை பிறப்பித்து, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இது தமிழக அரசின் கொள்கை முடிவு என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வேதாந்தா நிறுவனம் டில்லி பசுமைத்தீர்ப்பாயத்தில் இன்று மேல்முறையீடு தனக்கு சாதாகமான தீர்ப்பை பெற்று வருகிறது. இந்த வழக்கில் உச்சநீதி மன்றமும், மத்திய அரசும் வேதாந்தா நிறுவனத்துக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது.

அதையொட்டியே பசுமை தீர்ப்பாயம் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ளவும், ஆலை குறித்து ஆய்வு செய்யவும் ஆணையத்தை அமைத்து விசாரித்து வருகிறது.

இந்த ஆணையத்தில், வேதாந்தா நிறுவனத்தின் கைக்கூலிகள் பலர், அப்பாவி மக்களை திரட்டி, ஸ்டெர்லைட் டுக்கு ஆதரவாக மனு கொடுத்து வருகின்றனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் சார்பாக தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பசுமை தீர்பாயம் சார்பாக வந்த  ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வு ஒருதலை பட்சமாக உள்ளது என்று குற்றம் சாட்டினார்.

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என்ற அச்சம் மக்களிடையே நிலவுவதாக கூறியவர்கள் இதன் காரணமாக மக்களிடையே பீதி, பதற்றம், கோபம்  நிலவுகிறது என்று கூறினர்.

ஸ்டெர்லைட்க்கு எதிரான ஆதாரங்களை தமிழக அரசு பசுமை தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்து ஆலையை திறக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

மக்களின் எதிர்ப்பை மீறி  ஸ்டெர்லைட் ஆலை பசுமை தீர்ப்பாயம் உதவியுடன்  மீண்டும் திறக்கப்பட்டால்… அதற்கு எதிரான மக்கள் போராட்டம் ஏற்கனவே நடைபெற்றது மாதிரி அமைதியாக இருக்காது….  கடுமையாக இருக்கும் என்றும் என்றும் அந்த பகுதி மக்கள் ஆவேசமாக கூறி வருகின்றனர்.

தூத்துக்குடியில்  மீண்டும் ஒரு துர்சம்பவம் நடைபெறாதவாறு தமிழகஅரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின்  கோரிக்கையாக உள்ளது.