காஷ்மீர்: பள்ளி மாணவர்களுக்கு தீவிரவாத பயிற்சி அளித்த 13 ஆசிரியர்கள் கைது

ஸ்ரீநகர்:

வடக்கு காஷ்மீர் பாரமுல்லாவில் உள்ள தனியார் பள்ளியில் மாணவ மாணவிகளிடம் தீவிரவாதிகளை புகழ்ந்து பேசியதோடு, மாணவர்களை தீவிரவாதிகளாக மாறுவதற்கு ஊக்குவித்தது தொடர்பாக 13 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. இதில் 13 முதல் 14 வயது வரையிலான சிறுவர்கள் இந்த மாத தொடக்கத்தில் ஜந்தர்பாரன் வனப்பகுதிக்கு சுற்றுலா அழைத்து சென்றபோது இது தொடர்பான ஊக்குவிப்பு நடந்துள்ளது.

அப்போது நடத்தப்பட்ட ஒரு நிகழ்வில் இறப்பை புகழ்ந்து பாடுதல், தீவிரவாதிகள் போல் நடித்தல், தாக்குதலுக்கு தயாராகுதல் போன்றவற்றில் சிறுவர்கள் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவிக்க பள்ளி நிர்வாகம் மறுத்துவிட்டது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் உடனடியாக களத்தில் குதித்து நடவடிக்கையை தொடங்கினர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 13 ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து பாரமுல்லா முதன்மை கல்வி அதிகாரி அப்துல் அகமது கூறுகையில்,‘‘இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். இந்த பள்ளியில் பயிலும் சுமார் 200 மாணவர்களும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். இ ந்த நிகழ்வை கண்டு அவர்களது பெற்றோரே கடும் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர்.