குஜராத்தில் இருந்து கிருஷ்ணகிரி திரும்பிய 13 பேர் : ஓசூர் எல்லையில் தனிமைப்படுத்தல்

சூர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர் குஜராத் மாநிலத்தில் இருந்து திரும்பி வந்த போது ஓசூரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுதல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை.  இதனால் மே மாதம் 17 ஆம் தேதி வரை இரண்டாம் முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசு வெளி மாநிலங்களில் சிக்கி உள்ளவர்களைச் சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப அனுமதி அளித்துள்ளது.   அதையொட்டி வெளி மாநிலங்களில் உள்ள தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்டோர் அவரவர் மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றனர்.

அவ்வகையில் குஜராத் மாநிலத்தில் வழிபாடு தலங்களுக்கு கிருஷ்ணகிரியைச் சேர்ந்த 13 பேர் திரும்பி வரமுடியாத நிலையில் இருந்தனர்.  இவர்கள் அனைவரும் ஆண்கள் ஆவார்கள்.  மத்திய அரசு உத்தரவுப்படி இவர்களைக் குஜராத் மாநிலம் தமிழக அரசின் ஒப்புதலுடன் கிருஷ்ணகிரிக்கு திருப்பி அனுப்பி உள்ளது.  இவர்கள் வேன் மூலமாக பெங்களூரு வழியாக நேற்று இரவு 11 மணிக்கு ஓசூர் ஜுஜுவாடி சோதனை நிலையத்துக்கு வந்தனர்.

இவர்களிடம் இருந்து மருத்துவர் குழு ரத்த மாதிரி மற்றும் சளி மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி உள்ளது.  இந்த பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு சொந்த ஊருக்கு இவர்கள் அனுப்பப்பட உள்ளனர்.    அதுவரை இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்.  இவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அளிக்கப்பட்டுள்ளன.