கேன்ஸ் ஓபன் செஸ் தொடர் – 13 வயது தமிழக வீரர் குகேஷ் சாம்பியன்..!

பாரிஸ்: கேன்ஸ் ஓபன் செஸ் தொடரில், தமிழகத்தைச் சேர்ந்த 13 வயது வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்று கோப்பையைக் கைப்பற்றினார்.

பிரான்ஸ் நாட்டில் கேன்ஸ் ஓபன் 34வது செஸ் தொடர் நடைபெற்றது. இதில், 9வது மற்றும் கடைசி சுற்றில், பிரான்ஸ் நாட்டின் ஹர்ட்டுய்னை எதிர்கொண்டார் தமிழ்நாட்டின் குகேஷ்.

இப்போட்டியில் வெள்ளைநிறக் காய்களுடன் களமிறங்கினார் குகேஷ். கடந்தாண்டு உலகின் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டம் வென்றவர்தான் இந்த குகேஷ்.

இப்போட்டியின் 50வது நகர்த்தலில் போட்டியை தனதாக்கினார் குகேஷ். அவர் பெற்ற புள்ளிகள் 7.5. இதன்மூலம் வெற்றிக் கோப்பை அவரின் வசமானது. கடந்த வாரம்தான், டென்மார்க் செஸ் தொடரில் வெற்றிப் பெற்றிருந்தார் குகேஷ்.