பெஷாவர்

பாகிஸ்தான் மற்றும் இத்தாலி கூட்டு அகழாய்வில் வடமேற்கு பாகிஸ்தானில் 1300 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பெருமாள் கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் இனைந்து வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் மாவட்டத்தில் அகழாய்வு நிகழ்த்தி வருகிறது.  இந்தப் பகுதியில் இந்து ஷாகி அல்லது காபூல் ஷாகி என அழைக்கப்படும் இந்து வம்சத்தினர் கிபி 850 முதல் கிபி 1026 வரை ஆட்சி செய்துள்ளனர்.

இந்த அகழாய்வில் ஒரு பெருமாள் கோவில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.   இது சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வசித்த இந்துக்களால் இந்து ஷாகி காலத்தில் கட்டப்பட்டதாகும்.  இந்த அகழாய்வில் பல குடியிருப்புக்களும் கண்காணிப்பு கோபுரங்களும் கோவில் அருகில் உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் கோவிலின் அருகே ஒரு குளம் இருந்தது கண்டறியப்பட்டு இந்த கோவிலுக்கு வருவோர் பிரார்த்தனைக்கு முன்பு இங்குக் குளித்து விட்டு சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.   இந்து சாகி காலத்தில் ஸ்வாட் மாவட்டம் இந்துக்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வசித்ததாகச் சொல்லப்பட்டாலும் அதற்கான ஆதாரம் தற்போது கிடைத்துள்ளது.

இத்தாலிய அகழாய்வு குழு தலைவர் லூக்கா இந்த பகுதியில் காந்தாரா நாகரிகத்தின் கீழ் கட்டப்பட்ட கோவில் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.   ஸ்வாட் மாவட்டத்தில் பல புத்த மத வழிபாட்டுத் தலங்களும் அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.