சென்னை,

மிழகத்தில் 13,000 யோகா ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.

தமிழக சட்டசபையில் 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விவாதம் நடைபெற்றது.

அப்போது, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது,

அரசு பள்ளிகளில் யோகா வகுப்பு அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதற்கு தேவையான 13,000 யோகா ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.

யோகா ஆசிரியர்கள் நியமனம் வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் பதிந்துள்ள பதிவு மூப்பு அடிப்படையிலேயே நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்து உள்ளார்.

மத்தியில் பாரதியஜனதா ஆட்சிக்கு வந்தபிறகு பாரம்பரிய உடற்பயிற்சியான யோகாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

யோகாவை மேம்படுத்தும் வகையில், உள்கட்டமைப்பு வசதிகள், ஆராய்ச்சிகள், ஆசிரியர்கள் பணி நியமனம் போன்றவற்றுக்காக ரூ.500 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது. மேலும், இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று  ஜூன் 21ந்தேதியை உலக யோகா தினம் என ஐ.நா. அறிவித்தது.

அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு, உலகம் முழுவதும் உள்ள 193 நாடுகளில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக அரசும் யோகாவை ஊக்கப்படுத்த திட்டமிட்டு யோகா ஆசிரியர்களை பள்ளிகளில் நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.