பிச்சை எடுத்த 137 பேர் அமீரகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அமீரகத்தின் ஷார்ஜா மற்றும் அஜ்மன் பகுதிகளில் பிச்சை எடுத்து வந்த 137 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 44 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரமலான் மாதம் என்பதால் சிலர் பிச்சை எடுப்பதில் தங்களை ஈடுபடுத்தி கொள்வதாக சார்ஜா அரசு குற்றம்சாட்டியுள்ளது. ஷார்ஜாவில் 113 பேர் பிச்சை எடுத்த காரணத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் சீசன் பிச்சைக்காரர்கள் என்றும் குற்றவியல் மற்றும் புலனாய்வுத் துறை இயக்குனர் கர்னல் இப்ராஹிம் அஜெல் தெரிவித்துள்ளார்.

ரமலான் மாதம் தொடங்கிய நிலையில் பிச்சைக்காரர்களை கட்டுப்படுத்தும் விதமாக அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையும் மீறி யாராவது பிச்சை எடுத்தால் 901 மற்றும் 80040 என்ற ஹாட்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஷார்ஜா அரசு அறிவித்துள்ளது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டுமென அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

ரமலான் மாதத்தை காரணமாக வைத்து கொண்டு பிச்சை எடுப்போர் மசூதி, கடைவீதி, வங்கி மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று பணம் கேட்டு பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களை தடுக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வறுமையான சூழ்நிலையில் வசிப்பவர்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்களை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் அஜ்மன் பகுதிகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த 24பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களில் சந்தேகத்திற்கு உள்ளானவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  இந்நிலையில் அண்மையில் காவல்துறை பிச்சை எடுப்பதற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. யாராவது பிச்சை எடுத்தால் 06-7034310 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் குடியிருப்பு வாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.