அகமதாபாத்

குஜராத் முதலாம் கட்ட தேர்தலில் 137 குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்கள் போட்டி இடுகின்றனர்.

குஜராத் சட்டசபை இரு கட்டங்களாக வரும் 9 மற்றும் 14ஆம் தேதிகளில் நடக்க உள்ளது.  முதலாம் கட்டமாக தேர்தல் நடக்கவுள்ள 89 தொகுதிகளில் போட்டியிட 977 பேர் போட்டியிடுகின்றனர்.  அவர்களின் வேட்புமனுக்களை இரு தன்னார்வு தொண்டு மையங்கள் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கையில், “மொத்தமுள்ள 977 வேட்பாளர்களில் 923 வேட்பு மனுக்கள் ஆராயப்பட்டன.  அந்த மனுவுடன் இணைக்கப்பட்டிருந்த பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் 137 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளது தெரிய வந்துள்ளது. அதில் தீவிரமான குற்றங்களான கொலை, கொலை முயற்சி, கடத்தல், பாலியல் பலாத்காரம் ஆகியவைகளின் கீழ் 78 பேர் மீது வழக்குகள் உள்ளன.  இந்த முதலாம் கட்ட தேர்தல் வேட்பாளர்களில் 10 பாஜக வேட்பாளர்கள் மீதும் 20 காங்கிரஸ் வேட்பாளர்கள் மீதும் தீவிரமான குற்ற வழக்குகள் பதியப் பட்டுள்ளன” என தெரிவிக்கப் பட்டுள்ளது.