நாமக்கல்: நாமக்கல்  மாவட்டத்தில் இன்று ஆய்வு செய்த தமிழக முதல்வர் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் ரூ.14.44 கோடி மதிப்பிலான 26 முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்து, ரூ.137.65 கோடி மதிப்பிலான 130 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களில் ஆய்வு நடத்தினார்.

இன்று பிற்பகல் நாமக்கல் மாவட்டம் வந்த முதல்வர், அங்கு ஆட்சியர் அலுவலகத்தில்  ஆய்வு செய்தார். பின்னர் பல்வேறு மக்கள் நலப்பணிகளை தொடங்கி வைத்தும், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், நாமக்கல் மாவட்ட ஏழை, எளிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நாமக்கல் – மல்லசமுத்திரம், எலச்சிபாளையம், ராசிபுரம் ஒன்றியங்களில் ரூ.240 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் மற்றும், நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிய குடியிருப்புகள் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (21.08.2020) நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியினை பார்வையிட்டார்.

தொடர்ந்து, நாமக்கல்லில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரியை முதல்வர் பழனிசாமி ஆய்வு செய்தார். அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் குறித்து பொறியாளர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்தார்.