பாகிஸ்தானில் 14 பேருந்து பயணிகள் படுகொலை!

கராச்சி: ‍தென்மேற்கு பாகிஸ்தானில், பேருந்துகளில் பயணம் செய்த பயணிகளில் 14 பேர், தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் முக்கிய நகரான கராச்சி – குவடார் ஆகியவற்றை இணைக்கும் கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்துகளை மறித்த தீவிரவாதிகள், பயணிகளின் அடையாள அட்டைகளைப் பார்த்து, அவர்களைப் பிரித்தெடுத்து கடத்திச் சென்று படுகொலை செய்தனர்.

குவடாரில்தான், பெரிய ஆழ்கடல் துறைமுகத்தை கட்டி வருகிறது சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

தென்மேற்கு பலுசிஸ்தான் பகுதியில் நீண்டகாலமாகவே தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

எரிவாயு மற்றும் தாதுவளம் நிரம்பிய இந்தப் பகுதியில், பிரிவினைவாத குழுக்கள் மற்றும் அடிப்படைவாத இஸ்லாமிய குழுக்கள் அதிகம் செயல்பட்டு வருகின்றன.

இந்தப் படுகொலைக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இந்த சம்பவம் குறித்து அவசர அறிக்கை ஒன்றை கோரியுள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்.

– மதுரை மாயாண்டி