திருமலை:

திருப்பதி கோவில் அருகே கோழிக்கறியுடன் மது விருந்து சாப்பிட்ட 14 பேர், புகாரின் பேரில் கைது செய்யப்பட்டனர்.  இதைத்தொடர்ந்து,  திருமலையில் மது விற்பனை செய்ய தடை விதிக்குமாறு மாநில அரசுக்கு திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டு உள்ளது.

புனித இடமான திருப்பதி ஏழுமலை கோவில் பகுதிகளில் அசைவம் சாப்பிடவும், மது அருந்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் பலமுறை எச்சரித்துள்ளதோடு, இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.

ஆனால், தடையை மீறி சிலர் பக்தர்கள் போர்வையில் அங்கு வந்து மது அருந்தியும், அசைவ உணவுகள் உண்டும் அசவுகரியத்தை உருவாக்குகிறார்கள். இந்த நிலையில் திருமலையில் உள்ள  பாட்டா கங்கண்ணா கோயில் அருகே ஒரு சிலர் கோழி பிரியாணி சாப்பிடுவதையும், மது அருந்துவதாகவும் காவல்துறைக்கு புகார் வந்துள்ளது.

இதைத்தொடந்து, அங்கு காவல்துறையினர் விரைந்தனர். போலீஸ் வருவதைக் கண்ட அந்த கும்பல் தப்பிக்க முயன்றனர். அவர்களை  காவல்துறையினர் அவர்களைத் துரத்திச் சென்று 14 பேரைப் பிடித்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, மீது தடை மற்றும் கலால் சட்டம், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சம்பவம் அங்குள்ள பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து,  திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டி.டி.டி) அறக்கட்டளை வாரியம், திருப்பதியில் ஆல்கஹால் விற்பனை மற்றும் அசைவ உணவுகள் விற்பனை செய்ய தடை செய்யக் கோரி ஆந்திர மாநில அரசுக்கு கடிதம் எழுத முடிவு செய்தது. தற்போது, ​​கோயில் நகரமான திருமலாவில் மலையின் உச்சியில் மது தடை உள்ளது. இந்த தடையை திருமலை நுழைவாயிலாக செயல்படும் திருப்பதி நகரத்திற்கும்  நீட்டிக்குமாறு டி.டி.டி அறக்கட்டளை கேட்டுக் கொண்டுள்ளது.