சென்னை: பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதி திரட்டுதல் மற்றும் ஆதரவளித்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்காக, ஐக்கிய அரபு அமீரக நாட்டிலிருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட 14 பேர், தேசிய புலனாய்வு அமைப்பால் டெல்லியில் கைதுசெய்யப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டுள்ளனர்.

அந்த 14 பேரும், சென்னை பூந்தமல்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரையும் வரும் 25ம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி செந்தூர்பாண்டி உத்தரவிட்டார். குண்டுவெடிப்பு வழக்குகள் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பு சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரிப்பதற்கான சிறப்பு நீதிமன்றம்தான் பூந்தமல்லி நீதிமன்றம்.

மொய்தீன் சீனி ஷாகுல் ஹமீது, முகமது இப்ராகிம், மீரான் கனி, முகமது ஷேக், முகமது அஸாருதீன், தெளஃபிக் அகமது, முகமது அக்ஸர், குலாம் நபி ஆசாத், ரஃபி அகமது, உமர் ஃபரூக், முன்தாப்ஸீர், ஃபரூக், ஃபைஸல் ஷெரீஃப் மற்றும் முகமது இப்ராகிம் ஆகியோர்தான் அந்த 14 பேர்.

இவர்களின் மீது ஐபிசி 120(b), 121 (a), 122 மற்றும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டம் பிரிவு 17, 18, 18(b), 38, 39 உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 14 நபர்கள் தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.