போலிசாருக்கு இலவசமாக காய்கறி வழங்க மறுத்த 14வயது சிறுவன் சிறையில் அடைப்பு

பீகார்: இலவசமாக காய்கறிகள் வழங்க மறுத்த 14வயது சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டதை தொடர்ந்து முதலமைச்சர் நிதிஷ்குமார் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். பாட்னா அருகே சித்ரகுப்தா நகரில் மூன்று மாதங்களுக்கு முன்பு உள்ளூர் போலிசார் 14வயதுடைய சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். காய்கறி விற்றுக்கொண்டிருந்த சிறுவனிடம் இலவசமாக காய்கறிகளை கேட்டு போலீசார் வற்புறுத்தியுள்ளனர். அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து அன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
child arrest
இது குறித்து தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியான நிலையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டது குறித்து முழுமையான விசாரணை நடத்தி இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க ஐ.ஜி.க்கு உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

போலீஸ் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்,” மார்ச் மாதம் 19ம் தேதி வாகன திருட்டு வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்கள் சிறுவனை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்கள் சிறுவன் வேறு வேறு காவல்நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார். சிறுவன் குறித்து குடும்ப உறுப்பினர்கள் பட்கர் காவல்நிலையத்தில் விசாரித்ததில் சிறுவன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுவனை உறவினர்கள் சந்தித்த போது காய்கறிகளை இலவசமாக தர மறுத்ததால் போலீசார் கோபமாக உள்ளதாக கூறியுள்ளான். திருட்டு வழக்கில் தகக்கு அடையாளம் தெரியாத இரு நபருடன் சேர்த்து வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் சிறுவன் கூறியுள்ளான். மேலும் தன்னை அடித்து துன்புறுத்தியதுடன் வற்புறுத்தி பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக அழுதுக்கொண்டே பாதிக்கப்பட்ட சிறுவன் கூறியதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.

பாட்னாவின் தலைமை காவல் ஆணையர் “ சிறுவன் சிறையில் அடைக்கப்பட்டது மிகவும் மோசமான சம்பவம், இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.