140 டிஎம்சி தண்ணீர் திறப்பு: காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் கர்நாடக அரசு தகவல்

டில்லி:

லைநகர் டில்லியில் இன்று நடை பெற்று வரும் 2வது  காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக மாநில அரசு அதிகாரிகள்,  காவிரி ஆணையம் உத்தரவிட்டதை விட கடந்த மாதம் அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக கூறி உள்ளனர்.

காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டம் இன்று 11.30 மணி அளவில்  ஒழுங்காற்றுக்  குழுத்தலைவர் நவீன்குமார் தலைமையில் டில்லியில்  தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் கர்நாடக அரசு சார்பில் கலந்துகொண்ட அதிகாரிகள், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவுபடி ஜூலை மாதம் தமிழகத்திற்கு 58 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். ஆனால், தாங்கள் 140 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட்டுள்ளதாக கூறி உள்ளனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அணை நிரம்பியதில் வேறு வழியின்றி  உபரியாக வெளி யேற்றிய நீரையும், கணக்கில் கொண்டு  140 டிஎம்சி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதாக கூறி  மோசடி வேலையில் ஈடுபட்டு உள்ளது. கர்நாடக அரசு அதிகாரிகளின் இந்த கணக்குக்கு தமிழக அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கர்நாடகாவில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அங்குள்ள அணைகள் அனைத்தும் நிரம்பி விட்டன.  அணையில் இருந்து  தண்ணீர் வெளியேற்றப் படாவிட்டால், அணை உடையும் என்ற  தருவாயில், வேறு வழியின்றி  அணையில் இருந்து தண்ணீர் காவிரியில் திறந்துவிடப்பட்டது.

காவிரியில் தண்ணீர் திறக்கப்படவில்லை என்றால், அணை உடைந்து கர்நாடகா பேரிழப்பையும், பெரும் சேதத்தையும் சந்திக்க நேரிடும். ஆனால், கர்நாடக அரசோ, உபரி நிரையும் கணக்கில் எடுத்து தில்லாலங்கடி வேலையில் ஈடுபட்டுள்ளது.