வெளியே நடமாடினால் ஓராண்டு சிறை! புதுச்சேரி முதல்வர் எச்சரிக்கை

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 144 ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நிலையில், “தேவையின்றி வெளியே நடமாடினால் ஓராண்டு சிறை” தண்டனை விதிக்கப்படும் என்று  புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், புதுச்சேரி மாநிலத்திலும்  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரியில் நேற்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

நேற்று மாலை முதல் 31ம் தேதி வரைதொழிற்சாலைகள், பெரிய நிறுவனங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல மதுபானக் கடைகள், ஆன்லைன் உணவு நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.  அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் மூடப்படுகின்றன.

இருந்தாலும் மக்கள் அச்சமின்றி வெளியே நடமாடி வருகின்றனர். இது அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி,  மக்களுக்கு உயிரை பற்றி கவலையில்லை என்று வேதனை தெரிவித்தார்.‘மேலும், “தேவையின்றி பொதுமக்கள் வெளியே நடமாடினால், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்தவர், 144 தடை உத்தரவுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்/

தேவைப்பட்டால் துணை ராணுவப்படை உதவி கோரப்படும் என்று கூறியவர், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க பொதுமக்களும் மாநில அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாமும் மத்திய மாநில அரசோடு இணைந்து, வீட்டுவிட்டு வெளியே செல்வதை தவிர்ப்போம்… கொரோனா வைரஸ் கோரப் பிடியில்  இருந்து நம்மை  பாதுகாப்போம்…