கொழும்பு: கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக இலங்கை முழுவதும் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை முழுவதும் அமுலாகும் வகையில் இன்று (மார்ச் 20) மாலை  6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (மார்ச் 23) அதிகாலை 6 மணி வரை ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்துவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே சில பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது இலங்கை முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு சமயத்தில் பொதுப் போக்குவரத்தும், அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும், கட்டுநாயகே விமான நிலையம் செல்வோருக்கு விமான டிக்கெட் பெர்மிட்டாக கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற நிலையிலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. கொரோனா தொற்றுக்கு 65 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியிருக்கிறது.