காஞ்சிபுரம்: வடகிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 148 ஏரிகள் முழு கொள்ளவை எட்டி இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் மாதம் 28ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாகக் காஞ்சிபுரம் – செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்தில்  பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில் தற்போது 148 ஏரிகள் 100 சதவிகித கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது.

254 ஏரிகள் 75 சதவிகிதமும், 142 ஏரிகள் 50 சதவிகிதமும்,  241 ஏரிகள் 25 சதவிகிதமும் நிரம்பியுள்ளது . 40 ஏரிகள் 25 சதவிகிதத்திற்கும் குறைவாகத் தனது கொள்ளளவை எட்டியுள்ளது என பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்  நிவர் புயல் மாமல்லபுரம் – புதுச்சேரி அருகே அதிதீவிர  புயலாக கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளதால் சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டியது. தொடர் மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி  22 அடியை நெருங்கியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி,  இன்று நண்பகல் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.