புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாளில் சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள்… உச்சநீதி மன்றம்

டெல்லி :
புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள், அவரவர்  சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக கூலித்தொழிலாளிகள் புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள். தொழிற்நிறுவனங்கள் மூடப்பட்டதால், அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்பட்ட அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்ப ஏற்பாடு செய்யும்படி மத்திய மாநில அரசுகளிடம் மன்றாடினர். ஆனால், மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளாத நிலையில், ஏராளமானோர் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மத்திய அரசு சில  சிறப்பு ரயில்இயக்கி வருகிறது. இதற்கும் கட்டணம் வசூலிக்கப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும் சோகம் அடைந்தனர். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
வழக்கின் இன்றைய  விசாரணையின்போது,  மத்திய அரசின் சார்பில் ஆஜராகி விளக்கம் அளித்த  சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ஜூன் 3 வரை 4,228 சிறப்பு ஷராமிக் ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்த ரயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களில் இருந்து இதுவரை   51லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். 41 லட்சம் பேர் சாலை மார்க்கமாக சொந்த ஊர் திரும்பியுள்ளனர். இதன் மூலம் 1 கோடி பேர் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளைதாக தெரிவித்தார்.
இதையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள், மீதமுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை,அடுத்த 15 நாட்களுக்குள் அவர்களின்  சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.