கூட்டுப் பிரார்த்தனை – ஒரே குடும்பத்தில் 15 பேருக்கு தொற்றிய கொரோனா!

சென்னை: கூட்டுப் பிரார்த்தனை நடத்தியதால், சென்னையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த 15 பேரில், ஒரு தம்பதியர் தூய்மைப் பணியாளர்களாக உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அக்குடும்பத்தினர், சென்னை திருவிக நகர் பகுதியில் வசித்து வருகின்றனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் 40 வயதிற்கு கீழுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டுக் குடும்பமாக வாழும் அவர்கள், 3 மாடி கட்டடத்தில் வசித்து வந்தனர். பிரார்த்தனைக் கூட்டம் தரை தளத்தில் நடந்துள்ளது.

அந்தப் பிரார்த்தனை கூட்டத்தில், வெளியிலிருந்து வந்த நபர்கள் யாரேனும் கலந்து கொண்டார்களா? என்பதைப் பற்றி விசாரணை நடந்து வருவதாகவும், குடும்ப உறுப்பினர்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை மட்டும் சென்னை திருவிக நகர் பகுதியில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 25. இதன்மூலம், அப்பகுதியில் இதுவரை வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 80 என்பதாக உயர்ந்துள்ளது.