புறநகர் ரெயிலில் சீட்டு விளையாடிய 15 பேருக்கு அபராதம்

சென்னை

ரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து சென்டிரலுக்கு வந்த புறநகர் ரெயிலில் சீட்டாடிய 15 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணம் மற்றும் அதைத் தாண்டி உள்ள பகுதிகளில் இருந்து பலர் சென்னைக்கு பணிக்கு வந்து தினமும் திரும்புகின்றனர். அவர்கள் செண்டிரல் – அரக்கோணம் புறநகர் ரெயிலில் பயணம்செய்கின்றனர். அவ்வாறு செல்லும் பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஒரு சிலர் சீட்டு விளையாட்டு விளையாடுவதாக புகார்கள் வந்தன.

ரெயில்வே பாதுகாப்புப் படையினர் அவர்களைப் பிடிக்க பயணிகளைப் போல் பயணம் செய்தனர். அப்போது அரக்கோணத்தில் இருந்து செண்டிரல் வரும் காலை ரெயிலில் இரண்டாம் பெட்டியில் 15 பேர் சீட்டு விளையாடியபடி வந்தனர்.

அவர்கள் சீட்டுக் கட்டுக்களை அடுக்கி வைத்துக் கொண்டு விளையாடியதால் பல பயணிகள் உட்காரவும் இடம் இன்று தவித்தனர். ரெயில்வே பாதுகாப்புப் படையினர் சீட்டு விளையாடிய 15 பேரையும் கைது செய்து சென்னை வில்லிவாக்கம் ரெயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

அதன் பிறகு அவ்ர்களை செண்டிரலில் உள்ள ரெயில்வே நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். விசாரணையில் அவர்கள் தனியார் நிறுவனங்களில் பணி புரிவது தெரிய வந்தது. அவர்களுக்கு நீதிபதி அபராதம் விதித்தார். அத்துடன் பயணிகளுக்கு இனி இடையூறு தரக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.