சேலம் நகராட்சி உருவாக்கப்பட்டு 150-வது வருடம் துவங்குவதை ஒட்டி இன்று முதல் ஒரு வருடத்துக்கு விழா நடத்த பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.

சேலம் நகராட்சி கடந்த 1866-ம் ஆண்டு நவம்பர் 1-ம் துவக்கப்பட்டது. இதையடுத்து வருடம்தோறும் நவம்பர் 1-ம் தேதி சேலம் வாழ் பொதுமக்கள் மற்றும்   அமைப்புகள் கொண்டாடி வருகிறார்கள்.

1916-ம் ஆண்டு பொன் விழாவும்,   1966-ம் ஆண்டு நூற்றாண்டு விழாவும் சேலம் நகராட்சி சார்பில் கொண்டாடப்பட்டது. தற்போது, 149 ஆண்டுகள் நிறைவுற்று இன்று முதல் 150-வது ஆண்டு துவங்குகிறது.

இதையடுத்து பல்வேறு அமைப்புகள் சேலம் தினத்தை கொண்டாட சிறப்பு  ஏற்பாடுகளை செய்திருக்கின்றன. குறிப்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளன. சுற்றுச்சூழலின் மீதான அக்கறை, புராதன இடங்களை பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

மேலும் சாலை ஓரங்களில் மரம் நடுதல், நீர் நிலைகளை பாதுகாத்தல் போன்றவை குறித்தும்  பிரச்சாரம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே நகராட்சி சார்பில் இயக்கப்பட்ட முதல் கல்லூரியான அரசு கலைக்கல்லூரி வளாகம் மற்றும் சுவர்களை தூய்மைப்படுத்தும் பணி இன்று காலை நடக்கிறது.

இன்டேக், சேலம் ட்ரீ கிளப், ரோட்டரி கிளப்புகள், ரவுண்ட் டேபிள், ஜேசீஸ், சிஐஐ’ இளைஞர் பிரிவு, வாசவி கிளப், வித்யாமந்திர் பள்ளி பழைய மாணவர்கள் சங்கம், கிளிக்ஸ் ஃபோட்டோகிராஃபி கிளப், வர்த் தகர்கள் சங்கம் போன்ற அமைப்புகள் மக்களுடன் இணைந்து சேலம் தினத்தை கொண்டாட இருக்கின்றன.