Random image

நடிகர் திலகமும் பசு ரட்சகர்களும் : அப்பணசாமி

குற்றம் கடிதல்: 16

சிவாஜி கணேசனுக்கு அளிக்கப்பட்ட ’நடிகர் திலகம்’ பட்டத்தைப் பிடுங்கி பிரதமர் மோடிக்கு அளிக்காததுதான் பாக்கி. பசு வதையைக் காரணம் காட்டி தலித் மக்கள் அடித்து, உதைத்து, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அவர் பேசிய பேச்சை சமூக வலைத்தளங்களில் பலரும் நம்பவில்லை. ’நடிகர் திலகம்’, ’தாதா சாகேப் பால்கே’, ‘செவாலியே’ பட்டங்கள் கொடுத்துக் கேலி செய்து கொண்டாடிவிட்டனர்.

அப்படி அவர் என்ன பேசினார். தெலுங்கானா மாநில எம்.பி. க்கள் கூட்டத்தில் பேசியபோது ”மக்களே உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால், யாரையாவது அடிக்க வேண்டுமென்றால் என்னை அடியுங்கள். நீங்கள் சுட வேண்டுமென்றால் என்னைச் சுடுங்கள்; தலித் சகோதரர்களைச் சுடாதீர்கள்” என்றார்.

நரேந்திரமோடி
நரேந்திரமோடி

ஒரு தலைவர் தலித்துகளுக்கு எதிரான வன்முறைக்கு எதிராக உணர்ச்சி வசப்பட்டுப் பேசும்போது அது மக்களை ஈர்க்கத்தானே வேண்டும். ஆனால் கேலிப் பொருளானது ஏன்?

உதாரணமாக, பிரிவினையைக் காரணம் காட்டி முன்பு இரு மதங்களுக்கு இடையில் பயங்கர கலவரம் வெடித்தபோது மகாத்மா காந்தி நவகாளி யாத்திரை சென்றார். அப்போது கலவரப் பகுதியிலேயே உண்ணா நோன்பினையும் தொடங்கினார். மக்களுடன் நேரு உட்பட பலரும் அப்போது கலங்கினர். உண்ணா விரதம் இருப்பது பாதுகாப்பானது அல்ல என்றனர். ‘என் கண் முன்னால் ஒரு சமுதாயத்தினரை மற்றொரு சமுதாயத்தினர் கொலை செய்கிறார்கள். இதை என்னால் நிறுத்தமுடியாவிட்டால், அதைவிட நான் சாவதே மேல்’ என்று கூறி உண்ணாவிரதத்தைக் கைவிட மறுத்து, அதனைத் தொடர்ந்தார். அதற்காக யாரும் மகாத்மா காந்தியைக் கிண்டல், கேலி செய்யவில்லை.

காந்தியின் நவகாளி யாத்திரை
காந்தியின் நவகாளி யாத்திரை

விடுதலைக்கு முன்பு சென்னையில் தொழிலாளர்கள் கூலி கேட்டுப் போராடினர். போலீஸ் பட்டாளம் துப்பாக்கியைத் தூக்கியது. ’போராட்டக்காரர்கள் கலைந்து செல்லா விட்டால் சுட்டு விடுவோம்’ என்று மிரட்டியது. உடனே அங்கிருந்த அமரர் ஜீவானந்தம் போலீஸ் துப்பாக்கியின் முன் நின்று மார்பைக் காட்டினார். “சுடு! அரை வயிறு பட்டினியால் சாவதை விட உன்னால் சாவதே மேல்’ என்று கர்ஜித்தார். இதற்காக யாரும் ஜீவானந்தத்தைக் குறை கூறவில்லை. இன்றும் மக்கள் தலைவராக அவர் உயர்ந்து நிற்கிறார்.

ஆனால். மோடி சொன்னால் மட்டும் ஏன் இப்படி கிண்டலடிக்கிறார்கள். காரணம், முன்னவர்கள் ஆட்சிக்கு எதிராக முழக்கமிட்டார்கள்.

ஆனால், நம் பிரதமரோ கையில் ஆட்சியையும் அதிகாரத்தையும் வைத்திருந்தார். தலித்துகள் மீது தாக்குதல் நடந்த குஜராத் மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடைபெறுகிறது. இதைவிட பசுவின் பெயரால் தலித் மக்களையும் சிறுபான்மை மக்களையும் வன்முறைக்கு உள்ளாக்குவதும், கொலை செய்வதும் பாஜக மற்றும் அதன் இணை அமைப்பினர்தான். இத் தாக்குதல்கள் பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிகம் நடைபெறுகின்றன.

குஜராத்.. தலித்கள் மீது தாக்குதல்..
குஜராத்.. தலித்கள் மீது தாக்குதல்..

அதனால், நாட்டின் உச்ச அதிகார பீடத்தில் உள்ள பிரதமர் மோடி அதைக் கண்டிக்காமல், அதில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடாமல் சின்னக் குழந்தையைப் போல ‘அடிக்கணுன்னா என்னை அடிங்க, சுடணும்னா என்னைச் சுடுங்க’ என்று சொல்வதால் சமூக வலைத்தளத்தில் அவரைக் கழுவி கழுவி ஊற்றுகிறார்கள்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததிலிருந்தே சிறுபான்மை மக்களுக்கும் தலித் மக்களுக்கும் தலைவலிதான். மக்களைப் பாதுகாப்பதைவிட பசுக்களைப் பாதுகாப்பதை சங்கல்பமாக எடுத்துக் கொண்டு செயல்படுவது போல, அங்கே பசுவைக் கொன்று விட்டார்கள். இங்கே பசுக்கறியை ஒளித்து மறைத்து வைத்திருக்கிறார்கள், எடுத்துச் செல்லுகிறார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக பசுக்கறியைச் சாப்பிடுகிறார்கள் என்று ஒரே கூப்பாடு.

அது மட்டுமல்ல, அப்படி சந்தேகப்படுபவர்கள் மீது பாஜகவினரும் அதன் இணை அமைப்பினரும் தாங்களே நீதிபதிகளாக இருந்து நடவடிக்கை எடுத்தனர். உத்தரப் பிரதேச மாநிலம் தாத்ரி என்ற கிராமத்தில் ஒரு இசுலாமிய முதியவர் பசுக்கறி சாப்பிட்டார் என்ற சந்தேகத்தில் கொல்லப்பட்டார். ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்காரில் பசுவைக் கொன்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு இசுலாமியர்களைக் கொன்று அந்த மனிதர்களின் தோலை உரித்து மரத்தில் தொங்கவிட்டனர். ஜார்க்கண்டில் ஒரு மைனர் சிறுவனை இதே சந்தேகத்தின் பேரில் கொன்று தோலை உரித்தனர். இதே போல இமாசல பிரதேசத்தில் ஒருவர், மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் என தாக்கப்பட்டனர். எங்குமே பசுவோ கன்றோ கொல்லப்படவில்லை. சந்தேகம்தான். மன ‘பிராந்தி’யைக் குடித்துவிட்டு ஆட்டம் போட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநில எம்.எல்.ஏ ஒருவர் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்பதற்காக ஸ்ரீநகர் முதல் டெல்லி வரை அவரைக் காவிப்படையினர் தாக்கினர். டெல்லி கேரள பவனில் மாட்டிறைச்சி வழங்கியதற்காக சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்தவர்கள் கேரள மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேரள பவனுக்குள் புகுந்து துவம்சம் செய்தனர். ஒரு பாஜக தலைவர் மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்றார். இரண்டு ஆண்டுகளாக நாட்டில் மாட்டுக்கறி பஞ்சாயத்துதான் முழுமையாக நடந்துள்ளது.

இதன் உச்சக்கட்டமாக, குஜராத்தில்  உனா என்ற இடத்தில் பசு மாட்டைக் கொன்று தோலை உரித்து எடுத்துச் சென்றதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் தலித்துகள் தாக்கப்பட்டனர். அதை வெறுமனே தாக்குதல் என்று கூற முடியாது. அங்கு கோர தாண்டவமே ஆடியுள்ளனர்.

வாஷ்ராம் சர்வையா, ரமேஷ் உள்ளிட்ட நான்கு தலித் இளைஞர்களை அடித்து இழுத்துச் சென்று பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். அப்படியும்  ஆத்திரம் தணியாமல் அவர்களைக் காரில் கட்டி ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர்.

கடைசியில் உண்மை என்ன தெரியுமா? இங்கும் பசுவை யாரும் கொலை செய்யவில்லை. அது கிர் வனப்பகுதி என்பதால் அங்குள்ள சிங்கங்களால் பசு அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறது. இதை அப் பகுதி காவல்துறை ஐஜி உறுதிசெய்துள்ளார். அந்தப் பசுவின் உரிமையாளர் அதை எடுத்துச் சென்று புதைப்பதற்காக உள்ளூர் தலித் தொழிலாளர்களை அழைத்துள்ளார். அவர்கள் வர மறுத்ததால் அருகில் இருந்த சர்வையா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை அழைத்து வந்துள்ளார். அவர்கள் பசுவின் தோலை உரித்து அடக்கம் செய்யும் முன் இவ்வளவு அலப்பறைகளையும் நிகழ்த்தி இருக்கிறார்கள்.

குஜராத்தில் தலித் மக்கள் போராட்டம்
குஜராத்தில் தலித் மக்கள் போராட்டம்

இவர்களுக்குப் பெயர்தான் பசு ரட்சகர்களாம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் பசு ரட்சகர்கள் செய்து வந்த அராஜகங்கள் பூமராங் போல அவர்களை நோக்கித் திரும்பியிருக்கிறது. கோபம் அடைந்த தலித் மக்கள் மாபெரும் எழுச்சி பெற்று விட்டார்கள். லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். இதனால் குஜராத் மாநில பாஜக முதல்வர் ஆனந்தி பென் மேலிட அழுத்தத்தால், ‘வயதைக் காரணம் காட்டி’ பதவி விலகுகிறார். ஆனால் தலித் மக்கள் படுகொலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை ஏதும் இல்லை. இதனால் அகமதாபாத் முதல் உனா வரை பிரமாண்ட பாத யாத்திரை பேரணியைத் தொடங்கியுள்ளனர். இதில் தலித்துகளுடன் இசுலாமிய சிறுபான்மை மக்களும் கை கோத்துள்ளனர்.

இதனால் பாஜக தலைமை ஆட்டம் கண்டுள்ளது. அடுத்தடுத்து உ.பி.யிலும், பாஜக ஆளும் கோட்டை மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இதுவரை இத்தனை அராஜகங்கள் நடந்தும் அதைக் கண் கொண்டும் பாராத, கேளாத, வாய் திறந்து பேசாத, கண்டிக்காத பிரதமர் மோடி திடீரென்று வாய் திறந்திருப்பதுதான் காமெடியாகி விட்டது. அப்போதும் பசுவின் பெயரால் வன்முறையில் ஈடுபடும் பசு ரட்சகர்களான சங்கப் பரிவாரங்களை அவர் கண்டிக்கவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத தமது கட்சி ஆளும் மாநில அரசுகளின் அலட்சியம் குறித்து எதுவும் சொல்லவில்லை. பிரதமர் நினைத்தால் தன் கட்சிப் பரிவாரங்களுக்கு எச்சரிக்கை விடுக்கலாம். ஆனால் அவர் ’என்னைச் சுடுங்கள்’ என்கிறார்.

ராஜஸ்தான் பசு காப்பகத்தில்...
ராஜஸ்தான் பசு காப்பகத்தில்…

இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், கடந்த வாரம் பாஜக ஆட்சி நடைபெறும் ராஜஸ்தான் மாநிலத்தில் பசு பாதுகாப்பகத்தில் இருந்த 500 பசு மாடுகள் உணவு இல்லாமல் பட்டினியால் மடிந்துள்ளன. பல கோடி ரூபாய் அரசு நிதியில் இயங்கும் இந்தக் கோசாலையில் கோமாதா பட்டினியால் செத்திருக்கிறாள். ஒரு மாதா, இரண்டு மாதா அல்ல; 500 கோ மாதாக்கள். ஆனால், பசு ரட்சகர்கள் யாருக்கும் நெஞ்சு வெடித்ததாகத் தெரியவில்லை.

நம் பிரதமர் மோடிகூட தமது பசு விசுவாசத்தைப் பதிவு செய்யவில்லை. அடுத்து நடைபெற உள்ள உத்தரப் பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல்தான் அவருக்குக் குறி. அங்கு பசுவைக் காட்டி சிறுபான்மை மக்களைத் தனிமைப்படுத்தி இந்து வாக்குகளைப் பெறலாம் என்று நினைத்தால் குஜராத்தில் தலித் எழுச்சி வட மாநிலங்களில் பரவி வருகிறது. அதனால்தான் பசுவின் பெயரால் வன்முறையில் ஈடுபடுபவர்கள் சமூக விரோதிகள் என்று மோடியின் வாயாலேயே சொல்ல வேண்டி வந்துள்ளது.

குஜராத் சம்பவம் குறித்துப் பேசும்போதுகூட தலித் சகோதரர்கள் என்று கூறுகிறார். சிறுபான்மை சமுதாயத்திடமிருந்து தலித் சமுதாயத்தைத் தனிமைப்படுத்த விரும்புவதும் தெளிவாகத் தெரிகிறது.

பசுவை விட தாழ்ந்ததுதானே மனித உயிர்…..

(கட்டுரையாளர் தொடர்புக்கு…  jeon08@gmail.com    https://www.facebook.com/appsmoo)