சென்னை

சுங்க இலாகா அதிகாரிகள் சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ. 4.6 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை கைப்பற்றி உள்ளனர்

சென்னை விமான நிலையத்தின் ஓடு தளத்தில் ஒரு பை யாரும் கவனிப்பாரின்றி கிடந்தது.  இதைக் கண்ட சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகமுற்று வெடிகுண்டு நிபுணர்களை அழைத்து சோதனை செய்தனர்.  பையில் வெடிகுண்டுகள் இல்லை.  மாறாக 16 கிலோ எடையுள்ள தங்கக் கட்டிகள் இருந்தன.  இதன் மதிப்பு சுமார் ரூ. 4.6 கோடி ஆகும். அந்தப் பையை அப்படி அனாதையாக விட்டுச் சென்றவர் யார் என்பதைக் காண அங்கிருந்த சிசிடிவி பதிவை சுங்க இலாகாவினர் சோதனை இட்டனர்.

அந்த பதிவில், விமான நிலையத்தில் டிராலி ஓட்டுனராக பணி புரியும் குமார் என்பவர், இந்தப் பையை விமானத்தில் இருந்து இறக்குவது பதிவாகி உள்ளது.   மேலும் தூரத்தில் அதிகாரிகள் வருவதைக் கண்டதும், குமார் அந்தப் பையை ஓடுதளத்தில் வைத்துவிட்டு வேகமாக சென்றதும் கண்டறியப்பட்டது.   குமாரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  அவருக்கு ஏதும் சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கலாம் என்னும் கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.