ஐதராபாத்:

ஐதராபாத் பழைய நகரம் நவாம் சாஹிப் குந்தா பகுதியை சேர்ந்தர் சயீதா உன்னிசா . இவர் பலாகுனுமா போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார்.

அதில், ‘‘ எனது மகள் கடந்த இரு தினங்களுக்கு முன் போன் செய்தார். அப்போது ஓமன் தலைநகர் மஸ்கட்டில் உள்ள தனது அரபு கணவர் சேக் அகமது தன்னை உடல் ரீதியாக துன்புறுத்துவதாக தெரிவித்தார். அதனால் அவர் இந்தியா திரும்ப விரும்புவதாக தெரிவித்தார்’’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அவர் போலீசாரிடம் கூறுகையில்,‘‘ எனது மகள் தன்னை ஐதராபாத் அனுப்பி வைக்குமாறு கேட்டுள்ளார். ஆனால், சிக்கந்தர் என்பவரிடம் ரூ. 5 லட்சம் கொடுத்து உன்னை வாங்கியிருப்பதாகவும், அந்த பணத்தை திருப்பி கொடுத்தால் தான் அனுப்பிவைப்பேன் என்று சேக் அகமது தெரிவித்துள்ளார்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘ எனது உறவினர் கவுசியா தனது கணவர் சிக்கந்தருடன் இணைந்து கடந்த ரம்ஜான் பண்டிகையின் போது எனது மகளை ஓமன் நாட்டை சேர்ந்த 65 வயது முதியவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். முதலில் நான் இந்த திருமணத்திற்கு மறுத்தேன். மஸ்கட்டில் மகள் சொகுசு வாழ்க்கை வாழ்வார் என்று எனக்கு சில வீடியோ காட்சிகளை காட்டி சம்மதிக்க வைத்தனர். பர்கஸ் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் திருமணம் நடந்தது’’ என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,‘‘ ஓட்டலில் எனது மகளுடன் 4 நாட்கள் தங்கிவிட்டு அகமது மஸ்கட் சென்றார். பின்னர் எனது மகள் தீகல்குந்தா பகுதியில் உள்ள சிக்கந்தர் வீட்டில் வசித்து வந்தார். சில வாரங்கள் கழித்து பாஸ்போர்ட், விசா உள்ளிட்டவைகளை ஏற்பாடு செய்து எனது மகளை மஸ்கட் அழைத்து சென்றுவிட்டார்’’ என்றார்.

இது குறித்து போலீஸ் உதவி கமிஷனர் முகமது தாஜூதீன் அகமது கூறுகையில்,‘‘ புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது. பயண ஆவணங்கள், திருமண சான்றிதழ்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஷரியா சட்டப்படி 65 வயது முதியவருக்கு 16 வயது சிறுமியை திருமணம் செய்வது குற்றமல்ல. அதனால் இதை குழந்தை திருமணமாக கருத முடியாது. வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டதா? என்பது குறித்த விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

அரபு ஷேக்குகளுக்கு ஏழை குடும்பங்களை சேர்ந்த சிறுமிகளை திருமணம் செய்து வைக்கும் சம்பவம் புதிதல்ல. ரூ. 10 ஆயிரம் முதல் லட்சம் ரூபாய் வரை விலை பேசி இவ்வாறு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. உலகளவில் குழந்தை திருமணங்கள் நடப்பதில் இந்தியாவின் பங்களிப்பு 33 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் 103 மில்லியன் பேர் 18 வயது பூர்த்தி அடைவதற்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளனர்.