சர்கேகுடாவில் கொல்லப்பட்ட 17 கிராமவாசிகள் மாவோயிஸ்டுகள் அல்லர்: நீதி ஆணைய அறிக்கை

ராய்ப்பூர்: ஜூன் 2012 சர்கேகுடா கொலைகள் தொடர்பான நீதி ஆணைய அறிக்கை ஊடகங்களுக்கு வெளிவந்துள்ளது – இது பாதுகாப்புப் படையினரை கண்டிக்கிறது. கொல்லப்பட்ட 17 பேர் மாவோயிஸ்டுகள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், கொலைகளுக்குப் பின்னர் “விசாரணையைத் தவறாகக் கையாண்டு”இருப்பதாகவும் அது கண்டறிந்துள்ளது.

சிஆர்பிஎஃப் மற்றும் சத்தீஸ்கர் காவல்துறையின் கூட்டுக் குழு 2012 ஜூன் 28 ஆம் தேதி இரவு பிஜாப்பூரில் உள்ள சர்கேகுடாவில் 17 பேரை சுட்டுக் கொன்றது. சர்கெகுடாவில் மாவோயிஸ்டுகள் இருப்பதைப் பற்றிய உள்ளீடுகளின் அடிப்படையில் தாங்கள் ஒரு நடவடிக்கையைத் தொடங்கியதாக பாதுகாப்புப் படையினர் கூறினர்.

அப்போது, ஒரு துப்பாக்கி சண்டை வெடித்தது. அதில் 17 பேர் கொல்லப்பட்டனர். இருப்பினும், கொல்லப்பட்டவர்கள் மாவோயிஸ்டுகள் அல்லர் என்றும் ஒரு கிராமக் கூட்டத்திற்கு கூடியிருந்த அப்பாவி கிராமவாசிகள் என்று உள்ளூர்வாசிகள் வலியுறுத்தினர். கொல்லப்பட்டவர்களில் ஆறு சிறுவர்கள் இருந்ததாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறினர்.

மனித உரிமை குழுக்கள் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அதிகரித்த அழுத்தத்தின் கீழ், பாஜக அரசு நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டியிருந்தது. எம்.பி, உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி வி கே அகர்வால் தலைமையிலான ஒரு உறுப்பினர் நீதி ஆணையம் கடந்த மாதம் தனது அறிக்கையை மாநில அரசிடம் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

அறிக்கை, ‘போலி என்கவுண்டர்’ என்ற சொற்களைப் பயன்படுத்தவில்லை, ஆனால் கொல்லப்பட்டவர்கள் கிளர்ச்சியாளர்கள் அல்லர் என்பதைக் குறிக்கிறது. “மிகவும் அருகாமையில்” இருந்து அவர்கள் கொல்லப்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் காலையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் குழு சுட்டிக்காட்டியுள்ளது.