தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக 1720 மரங்களை வெட்ட உத்தரவு

 

40 கிலோ மீட்டர் நீளத்திற்கு 21 அடி முதல் 36 அடி அகலப்படுத்துவதற்காக 1720 மரங்களை வெட்டும் பணி தொடங்கியிருக்கிறது.

ஒடிசா மாநிலத்தின் கன்ஜம் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை 59-ல் பெர்ஹாம்பூர் நகருக்கு அருகில் உள்ள ரத்தன்பூரில் இருந்து முன்ட்மரை வரையில் 126 கோடி ரூபாய் திட்டத்தில் இந்த பணி நடைபெறுகிறது.

2013ம் ஆண்டு புயல் தாக்குதலில் சாலையோரம் இருந்த பல்லாயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன, இதனை தொடர்ந்து அங்கு பல்வேறு புதிய மரங்கள் நடப்பட்டன.

இந்நிலையில் அவற்றை அகற்றுவதற்கு பதில் மாற்று இடங்களில் அவற்றை நடுவதற்கான முயற்சியை வனத்துறை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் என்று சுதிர் ரவத் எனும் சமூக சேவகர் கோரிக்கை வைத்துள்ளார்.

மாநிலத்தின் பிற பகுதிகளில் இதற்கு முன் இதுபோன்று மரங்களை மாற்று இடங்களில் நட்டதில் எந்த பயனும் இல்லை என்பதாலேயே அதை வெட்ட முடிவெடுத்திருக்கிறோம் என்று மாவட்ட வனத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்த சாலை அமைக்கும் பணியை இரண்டாடுகளில் முடிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அதன்பின் இருமடங்கு மரங்களை நடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்த அதிகாரிகள் சாலை அமைக்கும் நிறுவனமே அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதை பராமரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது என்றும் கூறினர்.

மரங்களை அகற்றவும் மீண்டும் மரங்களை நட்டு வளர்ப்பதற்கு என்று 5.70 கோடி ரூபாய் உத்தேச மதிப்பீடாக போடப்பட்டுள்ளது.

கடந்த பத்தாண்டுகளில் ஒரிசாவில் மட்டும் 16,45,410 மரங்கள் வெட்டப்பட்டிருப்பதாக மாநில காடு வளர்ப்பு மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் பிக்ரம் கேசரி அருகா பிப்ரவரி 23 அன்று சட்டசபையில் கூறியிருந்தார்.