17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, கடந்த 10-ம் தேதி தொடங்கியது. ஆறு திரையரங்குகளில், 55 நாடுகளில் இருந்து 130-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன.

7 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு கொண்ட தமிழ்ப் படங்களுக்கான போட்டிப் பிரிவில், ‘அடுத்த சாட்டை’, ‘அசுரன்’, ‘பக்ரீத்’, ‘ஹவுஸ் ஓனர்’, ‘ஜீவி’, ‘கனா’, ‘மெய்’, ‘ஒத்த செருப்பு’, ‘பிழை’, ‘சீதக்காதி’, ‘சில்லுக் கருப்பட்டி’ மற்றும் ‘தோழர் வெங்கடேசன்’ ஆகிய 12 படங்கள் தேர்வு செய்யப்பட்டன.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 19) இறுதி விழாவில் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த ‘ஒத்த செருப்பு’ சிறந்த படத்துக்கான முதல் பரிசை வென்றது. படத்தின் இயக்குநருக்கு 2 லட்ச ரூபாயும், தயாரிப்பாளருக்கு 1 லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாம் பரிசை ‘சில்லுக் கருப்பட்டி’ மற்றும் ‘பக்ரீத்’ ஆகிய இரண்டு படங்களும் பகிர்ந்து கொண்டன. இரண்டு படங்களின் இயக்குநர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும், தயாரிப்பாளர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.

சிறப்பு நடுவர் விருது, ‘அசுரன்’ படத்துக்கு வழங்கப்பட்டது. படத்தின் இயக்குநர் வெற்றிமாறனுக்கு 1 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. ‘அமிதாப் பச்சன் யூத் ஐகான் விருது’, ‘ராட்சசன்’ படத்தின் இயக்குநர் ராம்குமாருக்கு வழங்கப்பட்டது. அவருக்கு 1 லட்ச ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.

சிறப்பு நடுவர் சான்றிதழ் விருது, ‘ஜீவி’ படத்தின் கதையை எழுதிய பாபு தமிழ் மற்றும் வி.ஜே. கோபிநாத் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டது.