டில்லி:

17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்க வந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜனநாயகத்தில் எதிர்க்கட்சியின் பங்கு முக்கியமானது என்று கூறினார்.


17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் திங்கள்கிழமை காலை தொடங்கியது. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றத்தின் முதல் கூட்டம் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளோடு கூட்டம் தொடங்கியுள்ளது. இன்று முதல் அடுத்த மாதம் (ஜூலை)  26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

முன்னதாக பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்க வந்த பிரதமர் மோடி,   நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  புதிய கனவுகள், புதிய நம்பிக்கையோடு 17வது நாடாளுமன்றம் இன்று கூடுகிறது. நாட்டிற்கு சேவையாற்ற மக்கள் மீண்டும் ஒரு வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியம். எதிர்க்கட்சிகள் அவர்களின் எண்ணிக்கையைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. அவர்கள் சுறுசுறுப்பாகப் பேசுவார்கள்,  சபை நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள் என்று நம்புகிறேன் என்று கூறினார்.

எதிர்க்கட்சியின் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது என்று கூறியவர், ஜனநாயகத்தில் வலிமையான எதிர்க்கட்சி அவசியம் என்பதை உணர்ந்துள்ளோம், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.