18 எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு….3வது நீதிபதி முன்பு டிடிவி தரப்பு வாதம் நிறைவு

சென்னை:

18 அதிமுக எம்எல்ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை விசாரிக்க நீதிபதி எம்.சத்தியநாராயணனை 3-வது நீதிபதியாக நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சபாநாயகர், அரசு கொறடா உள்ளிட்டோர் சார்பில் மூத்த வக்கீல்கள் ஆர்யமா சுந்தரம், வைத்தியநாதன் ஆகியோரும், 18 பேர் சார்பில் மூத்த வக்கீல் ராமன், ராஜா செந்தூர்பாண்டியன் ஆகியோரும் ஆஜராகினர்.

வக்கீல் ராமன் வாதிடுகையில், ‘‘முதல்வருக்கு எதிராக கவர்னரிடம் கடிதம் கொடுக்கப்பட்டபோது கட்சியே 2 அணியாக பிரிந்து கிடந்தது. அ.தி.மு.க.வும், இரட்டை இலை சின்னமும் முடக்கி வைக்கப்பட்டிருந்தது. 18 எம்.எல்.ஏ.க்கள் மீது எப்படி கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும்?.

அதனால், சபாநாயகரின் உத்தரவே அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இது குறித்து 18 பேரிடம் விளக்கம் கேட்டு இருந்தால் உரிய பதிலளித்து இருப்பார்கள். சபாநாயகர் தன்னிச்சையாக தகுதி நீக்கம் செய்துள்ளார். முதல்-வரை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்கவில்லை. 18 பேரையும் தகுதி நீக்கம் செய்தது விதிமீறலாகும்’’ என்றார்.
இன்றும் அவர் தொடர்ந்து வாதிட்டார். இதையடுத்து டிடிவி தினகரன் தரப்பு வக்கீல்களின் வாதம் இன்றுடன் முடிந்தது. நாளையும், வெள்ளிக்கிழமையும் சபாநாயகர் சார்பில் வக்கீல் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடவுள்ளார்.