தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல்?

சென்னை:

டப்பாடி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 18 டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் மேல்முறையீடு செய்யாததால், அந்த தொகுதி களுக்கு விரைவில் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து தமிழக  தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  அகில இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி உள்ளார். இதன் காரணமாக விரைவில் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உருவாகி உள்ளது.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக எடப்பாடிக்கு எதிராக 18 எம்எல்ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். இதன் காரணமாக அவர்களை அதிமுக கொறடா பரிந்துரையின் பேரில் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளிலும் சபாநாயகர் தீர்ப்பு சரியே என கூறப்பட்ட நிலையில், தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்வதாக முதலில் தெரிவித்த டிடிவி தரப்பினர் பின்னர் தேர்தலை சந்திப்பதாக அறிவித்தனர்.

அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையத்துக்கு, தமிழக சட்டப்பேரவை அலுவலகம் அனுப்பி யது. அதன் அடுத்தக்கட்ட நடவடிக்கையாக  18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தமிழக தேர்தல் அதிகாரியுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாயின.

அப்போது, 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தேர்தல் ஆணையத்திடம்  தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, காலியாக உள்ள  18 தொகுதி களுக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே காலியாக உள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளில், திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ளதால், அங்கு தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்ற நிலையில், திருவாரூர் தொகுதிக்கு, 18 தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்புடன் சேர்ந்து அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கஜா புயல் நிவாரண பணிகள் நடைபெறுவதால்,தேர்தலை தள்ளி வைக்க தமிழக அரசு கோரினால், தேர்தல் தள்ளி வைக்கப்படலாம் என தேர்தல் ஆணையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.