ஒரே நாளில் 18 லட்சம் பேர் கருணாநிதிக்கு வாழ்த்து கூறி சாதனை!

சென்னை,

திமுக தலைவரின் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி, வாழ்த்து சொல்ல தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரே நாளில் 18 லட்சம் பேர் அவருக்கு வாழ்த்து கூறி பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

கருணாநிதியின், 94வது பிறந்த நாளை ஜூன் 3ந்தேதி வெகுசிறப்பாக நடைபெற இருக்கிறது. அவரது சட்டமன்ற 60ம் ஆண்டு வைரவிழாவும் பிறந்தநாள் விழாவோடு இணைத்து கொண்டாப்பட இருக்கிறது.

இதையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவிக்க, தி.மு.க., சார்பில், www.wishthalaivar.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம், கட்சியின் செயல் தலைவர்  ஸ்டாலின்  இணையதளத்தை தொடக்கி வைத்து முதல் வாழ்த்து செய்தியை பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து, தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், அந்த இணைய தளம் வாயிலாக, கருணாநிதிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

இணையதளம் செயல்பாட்டுக்கு வந்த சில மணி நேரத்தில் வெளிநாடுகளை சேர்ந்த தமிழர்கள் மட்டுமல்லாத  கலைஞர் அனுதாபிகள், தமிழ் அறிஞர்கள்  கருணாநிதிக்கு பிறந்த தின வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

நேற்று ஒரு நாள் மட்டும், 18 லட்சம் பேர் வாழ்த்து தெரிவித்து சாதனை படைத்து உள்ளனர்.