எம்ஜிஆர் நூற்றாண்டு விழா: வேலூர், மதுரை சிறைகளில் இருந்து 18 கைதிகள் விடுதலை

வேலூர்:

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  இன்று மதுரை மற்றும் வேலூர் சிறைகளில் இருந்து மேலும் 18 ஆயுள் தண்டனை கைதிகள்   விடுதலை செய்யப்பட்டனர்.

முன்னாள் தமிழக முதல்வர் மறைந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த ஆயுள் கைதிகள் தமிழக சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

முதல்கட்டமாக கடந்த பிப்ரவரி  மாதம் 25ம் தேதியுடன் 10 ஆண்டுகள் தண்டனையை நிறைவு செய்த ஆயுள் தண்டனைக் கைதிகள்  67 பேர்  விடுதலை செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஒவ்வொரு மாவட்ட சிறைகளில் இருந்தும் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளின் நன்னடத்தை குறித்து ஆய்வு செய்யப்பட்டு,  விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று  வேலூர் சிறையில் இருந்து 10வது கட்டமாக 7 ஆயுள் தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.

அதுபோல மதுரை மத்திய சிறையில் இருந்து 11வது கட்டமாக இன்று  11 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.  மதுரை மத்திய சிறையில் இருந்து இதுவரை  213 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை செய்யப்பட்ட கைதிகளை அவர்களது உறவினர்கள் கண்ணீர்மல்க அழைத்துச் சென்றனர்.