18 பேர் தகுதி நீக்க வழக்கு: 23ந்தேதி முதல் 5 நாள் தொடர் விசாரணை! 3வது நீதிபதி அறிவிப்பு

சென்னை:

டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றம் நியமித்த 3வது நீதிபதி சத்தியநாராயணா முன்பு இன்று பிற்பகல் விசாரணைக்கு வந்ததது.

வழக்கை விசாரணை செய்த நீதிபதி, இந்த வழக்கு ஜூலை 23 முதல் 27ஆம் தேதி வரை தினமும் விசாரிக்கப்படும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.

எடப்பாடியை முதல்வர் பதவியில் இருந்து  மாற்றக்கோரி பொங்கியெழுந்த டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்களை, கட்சி கொறடா பரிந்துரையின் பேரில்,  சபா நாயகர் தனபால்  தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

சபாநாயகர் உத்தரவுக்கு எதிர்ப்பு  தெரிவித்து, அதை ரத்து செய்ய வேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் சார்பாக சென்னை  உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதி மன்ற அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து வழக்கு  3வது நீதிபதி விமலாவின் விசாரணைக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, டிடிவி ஆதரவு எம்எல்ஏக்களில் தங்கத்தமிழ்செல் வன் தவிர மற்ற  17 பேரும் உச்சநீதி மன்றத்தில் கடந்த வாரம்  மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம், இந்த வழக்கில்  3வது நீதிபதி யாக விமலாவுக்கு பதில் நீதிபதி சத்தியநாராயணாவை நியமித்தது.

இந்த நிலையில் இன்று மாலை 3வது நீதிபதி சத்தியநாராயணா முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஜூலை 23 முதல் 27ம் தேதி வரை 5 நாட்கள் தினமும்  விசாரணை நடைபெறும் என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தார்.