சென்னை:

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்த பின்னர் டி.டி.வி. தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மாற்ற வேண்டும் என கவர்னரை சந்தித்து மனு அளித்தனர். இதையடுத்து, கட்சி விதிகளை மீறிவிட்டதாகக் கூறி அவர்கள் 18 பேரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனை எதிர்த்து 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் முதல் இவ்வழக்கு மீதான விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்குடன் நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கு, 21 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபைக்குள் குட்கா கொண்டு வந்த வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வழக்கு இன்று விசாரணை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதலாவது அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வைத்தியநாதன் வாதிடுகையில், ‘‘இந்த வழக்கில் மேலும் வாதகங்கள் மேற்கொள்ள கால அவகாசம் வேண்டும்’’ என்றார்.

தலைமை நீதிபதி பதில் கூறுகையில், ‘‘ஏற்கனவே அனைத்து விஷயங்களும் வாதிடப்பட்டுள்ளது. எனினும் வாதங்கள் அனைத்தையும் நாளைக்குள் (10ம் தேதி) முடித்துக் கொள்ள வேண்டும் என்றார். இதையடுத்து வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.