தினகரனை விட்டு விலகும் 18 எம்.எல்.ஏ.க்கள்!?

சசி – தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.  மற்றும் எம்.பிக்கள் ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். அணிக்கு.. அதாவது அ.தி.மு.க.வுக்கு அணி மாற தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு,  அ.தி.மு.க.,வையும், ஆட்சியையும் வெளிப்படையாகவே தங்கள் வசம் வைத்திருக்க  சசிகலா குடும்பத்தினர் திட்டமிட்டனர்.  ஆனால், அவர்களால் முதல்வ ராக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியும், அவர்களால் முதல்வர் பதவியை இழந்த ஓ. பன்னீர் செல்வ மும் கைகோர்த்து, சசி குடும்பத்தை ஒதுக்கிவைத்தனர்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை கவிழ்க்க,  தினகரன் தீர்மானித்தார்.  பழனிசாமி ஆட்சியை கவிழ்த்து விட்டு, புதிய ஆட்சி அமைக்கலாம். அப்போது  உங்களுக்கு மந்திரி பதவி கிடைக்கும்’ என, எம்.எல்.ஏ.,க்களிடம் தெரிவித்தார். சிலருக்கு பெரும் தொகையும் அளிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதையடுத்து தினகரனுக்கு ஆதரவாக 20 எம். எல்.ஏ.க்கள் அணிவகுத்தினர். இவர்களில் 18 எம்.எல்.ஏ.,க்கள், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக, ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். இப்போது அந்த, 18 பேரும் பதவியை பறிகொடுத்து நிற்கின்றனர்.

ஆனாலும்,  டி.டி.வி. தினகரன்தான் அதிமுகவை நிர்வகிப்பார் என்ற எதிர்பார்ப்பில் அவரிடம் இருந்தனர்.

ஆனால்  கட்சி, சின்னம் இரண்டுமே  பன்னீர் – பழனி அணிக்கு என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளித்துவிட்டது. ஏற்கெனவே ஆட்சியும் அவர்களிடம் இருக்கிறது.

இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரும், இனியும் இங்கிருந்தால் எதிர்காலம் இல்லை என்று தீர்மானித்து,  , ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். அணிக்கு.. அதாவது அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தினகரன், வெறும் மரமாக நிற்கும் நிலைமை வந்து விட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்து உள்ள, 18 பேரும், ஆட்சிக்கு ஆதரவு அளிக்க, முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இவர்கள், “இழந்த, எம்.எல்.ஏ., பதவியை, நீதிமன்றத்தின் மூலம் மீட்டு தருவதாக, தினகரன் தெரிவித்திருந்தார். அது நடக்காது என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது.  தவிர  உத்திரவாதம் தரப்பட்ட தொகையும் வரவில்லை. மேலும் அவரது குடும்பத்தினர் மீது மத்திய அரசு மிகுந்த கோபத்தில் இருக்கிறது. வருமானவரித்துறை சோதனை மீண்டும் நடக்கும் என்றும், ஏற்கெனவே நடந்த சோதனைகளின் அடிப்படையில் விசாரணை தொடரும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கட்சியும் சின்னமும் அவரது கையைவிட்டுப்போய்விட்டது. இனி அவர் புதுக்கட்சி தான் ஆரம்பிக்க வேண்டும். அப்படி ஆரம்பித்தால் அதன் எதிர்காலம் எப்படி  இருக்கும் என்பது கேள்விக்குறியே..

தவிர அதில் சேர்ந்தால், கட்சி தாவல் தடை சட்டப்படி, பதவி பறிபோகும்.

ஆகவே மீண்டும் அதிமுகவில் இணைந்துவிடுவதே நல்லது” என்று அந்த 18 எம்.எல்.ஏக்கள் தீர்மானித்துள்ளதாகக்  கூறப்படுகிறது.

முதற்கட்டமாக இவர்களில் சிலர் இன்னும் ஓரிரு நாட்களில் அ.தி.மு.க.வில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது.