லட்சத்தீவு கடற்பகுதியில் 180 மீனவர்கள் மீட்பு

கொச்சி:

ஒகி புயலில் சிக்கி லட்சத்தீவு கடற்பகுதியில் தத்தளித்த 180 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மற்றும் கேரள கடலோர பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாயமாயினர். பலர் மீட்கப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களை தேடும் பணியில் கடற்படை, கடலோர காவல்படை, விமானப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அப்போது லட்சத்தீவு கடற்பகுதியில் 17 படகுகளில் சுமார் 180 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்ததை கடற்படையினர் கண்டுபிடித்து மீட்டனர். அவர்கள் அனைவரும் கொச்சி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

குஜராத்தை சேர்ந்த 5 மீனவர்களும் கொச்சிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மீனவர்களின் விபரங்களை அதிகாரிகள் சேகரித்து வருகிறார்கள். லட்சத்தீவு, கோவா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் கடற்பகுதியில் கேரளா மீனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.