‘181’ – பெண்களின் பாதுகாப்புக்காக இலவச தொலைபேசி எண்: எடப்பாடி இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை:

மிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி எண்ணை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார்.

பெண்கள் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, இந்த திட்டத்தை மத்தியஅரசு ஏற்கனவே அறிமுகப்படுத்தி சில மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் படுகிறது.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் முதல், இந்த சேவை பரிசார்த்த முறையில்  செயல்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.

இந்த எண்ணை தொடர்பு கொண்டு பெண்கள் தங்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை, வரதட்சணை கொடுமை, குடும்ப வன்முறை  உள்பட பாதுகாப்பு சம்பந்தப்பட்ட எந்த பிரச்சினை என்றாலும் பேசி தீர்வு காணலாம். மேலும்,  பாதிக்கப்பட்ட பெண்களை மீட்டு, காப்பகங்களில் தங்க வைத்து, மனநலம், மருத்துவம் மற்றும் சட்ட உதவிகளை செய்யப்படும்.

மேலும், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புகள் உள்பட குழந்தைகள் முதல் முதியோர் வரை பெண்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்புக்கு இந்த எண்ணை அழைக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது

இந்த எண்ணிற்கு வரும் புகார்களை சேவை மையத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் முறையாக பதிவு செய்து வைக்கும்படி உத்தர விடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரச்சினைக்கு தீர்வு கண்டவுடன் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அந்த பெண்ணின் நிலை என்ன என்று ஆராய்ந்து பிரச்சினைகள் தீர்ந்து விட்டதை உறுதி செய்ய வேண்டும் என்று சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த சேவை மையத்துடன் காவல்துறை, மருத்துவம், சட்ட உதவிகள், கவுன்சிலிங் ஆகிய துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பெண்களிடம் இருந்துவரும் அழைப்புகளின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்க இது ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.