கொச்சி:

துபாயிலிருந்து 182 இந்தியர்களுடன் நேற்று மாலை புறப்பட்ட ஏர் இந்தியா சிறப்பு விமானம் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கியது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு காரணமாக விமான சேவைகள் முடங்கின. இதனால் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். இதன் முதல் நடவடிக்கையாக வெளிநாடுகளில் சிக்கி சொந்த நாடு திரும்ப முடியாத இந்தியர்களை மீட்டு வரும் ‘வந்தே பாரத்’ நடவடிக்கையினை மத்திய அரசு துவக்கியுள்ளது.

அதன்படி வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக 2 சிறப்பு ஏர் இந்தியா விமானங்கள் துபாய் சென்றன. நேற்று மாலை ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் முதல் விமானம் 49 கர்ப்பிணிகள், 4 சிறுவர்கள் உள்பட 181 இந்தியர்களுடன் புறப்பட்டது. நேற்று இரவு கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையம் வந்திறங்கியது. அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இரண்டாவது விமானம் 5 சிறுவர்கள் உள்பட 182 பேருடன் துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று மாலை புறப்பட்டு இரவில் கேரளாவின் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் வந்திறங்கியது. இதன் மூலம் வந்தே பாரத் நடவடிக்கை மூலம் இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் 363 இந்தியர்கள் துபாயிலிருந்து மீட்டு அழைத்துவரப்பட்டுள்ளனர்.