பஞ்சாப்: ரூ.10 ஆயிரம் சம்பளத்துக்கு காவலர் பணியில் சேர்ந்த 186 தொழில்நுட்ப பட்டதாரிகள்
சண்டிகர்:
பி.டெக்., மற்றும் எம்.டெக்.,, பயின்ற 186 தொழில்நுட்ப பட்டதாரிகள் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளத்திற்கு பஞ்சாப் காவல் துறையில் காவலர் பணிக்கு சேர்ந்துள்ளனர்.
இவர்களுக்கு 2 ஆண்டுகள் திறமை கண்டறியும் காலமாக கருதப்பட்டு இச்சம்பளம் வழங்கப்படவுள்ளது. 9 மாத பயிற்சி பெற்ற பின்னர் இந்த தொழில்நுட்ப பட்டதாரிகள் காவலராக அணிவகுப்பு முடித்து வெளியே வந்துள்ளனர். மொத்தம் 257 பேர் பயிற்சி பெற்றனர். இதில் 167 பேர் பஞ்சாப் காவல் துறை தகவல் தொழில்நுட்ப துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 90 பேர் நுண்ணறிவு பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து பயிற்சி கமாண்டன்ட் ராஜ்பால் சிங் சாந்து கூறுகையில்,‘‘இதில் 6 பேர் எம்.டெக்., பயின்றுள்ளனனர். 180 பேர் பி.டெக் பட்டதாரிகள். இதர நபர்கள் எம்.எஸ்சி., ஐடி, பி.எஸ்சி., ஐடி, எம்சிஏ, பிசிஏ மற்றும் டிப்ளமொ பயின்றவர்கள். முன்னதாக இதர பிரிவுகளில் பணியாற்றும் தொழில்நுட்ப ஊழியர்களை மாற்றுப் பணியாக அழைத்து வரப்படுவார்கள்.
ஆனால் தற்போது தகவல் தொழில்நுட்ப பிரிவுக்கு என பிரத்யேகமாக தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இதற்கு கணினி சார்ந்த பட்டம் முடித்திருக்க வேண்டும் என்பதே முக்கிய தகுதியாகும்’’ என்றார்.